நம்பிக்கை மனிதர்கள் 002
பெயர் : சுப்பையா.
வயது : 72.
திருமணம், மனைவி, குழந்தைகள், பேரன், பேத்தி… வாழ்க்கை.
தொழில் : ஆடு மேய்த்தல்
ஆம். 10 வயதில் இருந்து.
ஆடு மாடு மேய்ப்பவர்களை காணும்போதெல்லாம் எனக்கொரு கேள்வி வரும். அது ஏன் எந்த வேலைக்கும் தகுதி இல்லை எனில் ” ஏதாவது ஆடு மாடு மேய்க்கப்போ ” என்று சொல்கிறார்கள் ? அதென்ன அப்படி ஒரு கடை நிலை தொழிலா ? ஆச்சர்யமான ஒன்று சொல்லவா ? நாம் அனைவரும் அந்த கடைநிலை தொழிலில் இருந்து தான் ” நகர நரக உயரங்களை ” அடைந்திருக்கிறோம் !
Zenlp Practitioners வகுப்பின் போது அவரை சந்தித்தோம். பொதுவாக எனக்கு ஒரு அசாத்திய நம்பிக்கை உண்டு. நமக்கான வாழ்க்கை பாடங்கள் சட்டென தோன்றும் ” யாரோ ” மனிதர்களிடம் இருந்தும், சட்டென நிகழும் ஏதோ ஒன்றில் இருந்தும், அந்தப் பெருவெளியில் கிடைக்கும் – என்பதே என் அசாத்திய நம்பிக்கை. அப்படி எனில் பள்ளி, கல்லூரி, இத்யாதி .. இத்யாதி கள் ? ஹஹஹ்ஹ என்று சிரிக்கவே தோன்றுகிறது.
அவரிடம் பேச ஆரம்பித்த போது ஒரு மென் எதிர்ப்பை காண முடிந்தது.
” யார் நீங்க ”
விவரங்களை நான் சொன்ன பின்பு, கொஞ்ச நேர மௌனத்திற்கு பின்பே தன் இயல்பில் என்னை அனுமதித்தார்.
” அப்படி நின்னு எடுத்துக்கோங்க ” என்று அவர் சொல்ல ..
” இல்லை .. நீங்க வரணும் ” என்று நான் சொன்னேன்.
நான் கேட்டது அவரின் ஆட்டுக்குட்டியை. தோளில் சுமந்து புகைப்படம் எடுக்க. அவர் சொன்னது அப்படியே எடுக்க.

நான் சொன்னதை புரிந்துகொண்ட பின் …ஒரு சிறு துரத்தலுக்கு பின், ஆட்டுக்குட்டி ஒன்றை கொடுத்தார். புகைப்படம் எடுத்துக்கொண்டே பேசத் தொடங்கினேன். அவரின் வரலாறு ஒவ்வொரு பிரியாய் அவிழ்ந்தது.

” இதுவரை டாக்டர் பார்த்ததில்லை. 72 வயதாகிறது. நேற்று தான் கொஞ்சம் கால் முட்டி வலித்த மாதிரி இருந்தது. டாக்டரிடம் சென்று காண்பித்து வந்தேன். மற்றபடி .. நான் இப்படியே தான் இருக்கிறேன் ”
” அந்த கடைசியில் இருந்து இந்த கடைசி வரை .. 4 acres நம்முடையதுதான். பாட்டன் சொத்து. நாம இப்படியே ஆடு மேய்ச்சிகிட்டே வாழ்க்கையை ஓட்டியாச்சு ”
” ஒரு acre இங்கே என்ன விலை போகும் ? ” கேட்டபோது ..
” இப்போ ஒரு கோடி போகும் ” என்றார் அமைதியாக.
” அப்போ நீங்க கோடீஸ்வரர். ஆனா ஆடு மேய்க்கறீங்க .. இல்லையா ? ” என்று நான் சிரிக்க .. உடன் சிறிது சிரித்து சொன்னார் ..
” வித்தாதானுங்களே . வித்துட்டு அப்புறம் என்ன செய்யறது ? ”
ஆம். நான்கு கோடிக்கு சொந்த மனிதர். ஆடு மேய்த்து கொண்டு அமைதியாக வாழ்கிறார். ஒரு சொந்த வீடு கட்டிவிட்டு நாம் ஆடும் ஆட்டம் இருக்கிறதே … !
” ஒரு acre ஐ வித்துட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்ல ”
” இல்லைங்க. இது அப்படியே பேரன் பேத்திக்கு. நம்ம வாழ்க்கையை இப்படியே ஒட்டிட வேண்டியதுதான் ”
அமைதியாய் நின்றேன். தியாகங்களில் பல வகை உண்டு. இது எந்த வகை ?. தாத்தன் கொடுத்ததை பேரனிடம் கொடுப்பது. இடைப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக வாழ முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்வது.
” கொஞ்ச ஆடு வித்து இந்த வருஷத்திற்கு அரிசி வாங்கி வச்சாச்சு. இனி அப்படியே ஒட்டிட வேண்டியதுதான். ஏதாவது மீண்டும் பணம் தேவைப்பட்டால் .. சில ஆடுகளை வித்து காலத்தை ஒட்டிட வேண்டியதுதான் ”
இந்த யாரோ மனிதர்கள் தான் என் குருக்கள். இவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் போல சொல்லிக்கொடுக்க எந்த ஆசிரியராலும் முடிவதில்லை.
“பிரச்சினைகளை சமாளிச்சு அழகா வாழறீங்க ” என்று நான் சொன்னபோது ..
” அப்படி எல்லாம் இல்லைங்க. எல்லோருக்கும் பிரச்சினை உண்டு. ஏன் ? உங்களுக்கு பிரச்சினை இல்லீங்களா ? ” என்று நேர்க் கண்களில் கேட்கிறார்.
” இப்படி வந்து பேசினதில மகிழ்ச்சி. எல்லாம் அப்படியே ரோட்டு மேலயே விர் விர் ருன்னு பறப்பாங்க ” என்று ஒரு வறட்டு சிரிப்போடு அந்த சந்திப்பு நிறைவடையும் வேளை வந்தது.
மனம் வேறு உயரத்தை வாழ்க்கையை எதிர்கொள்ளலில் அடைந்து இருந்தது. ஆம் . ஒரு யாரோ மனிதரின் அனுபவ பகிர்தல் போதும் … மன settings அதுவாகவே அதை சரி செய்துகொள்ள !





