படம் சொல்லும் பாடம் – Aamhi Doghi -013
இரு வித்தியாச வாழ்க்கை முறைப் பெண்கள். அவர்களின் வாழ்க்கை முறை. அது ஏற்படுத்தும் வாழ்க்கை பயணம். சில படங்கள் நம்மை அப்படியே அமர வைக்கும். ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்காமல் அவர்களின் வாழ்க்கையுடனே பயணிக்க வைக்கும். அப்படி ஒரு படம் !
அப்பாவும் பெண்ணும் நேர்மைக்கு சொந்தம். அதேபோல கோபத்திற்கும். இரோருக்கும் இடையில் நடக்கும் புரிதல்கள். அங்கே வரும் இன்னொரு பெண். அவளின் அசாத்திய அமைதி. அவள் கேட்கும் சிறு கேள்விகள். இந்த வாழ்க்கை பயணத்தில் நாம் நமக்குள் கேட்டுக்கொள்ளும் சில கேள்விகள். படங்கள் நம்மை யோசிக்க வைக்க வேண்டும். ஏதோ பார்த்தோம் கடந்தோம் என்று இல்லாமல் நமக்குள் ஒரு ஜுவாலையை பற்ற வைக்க வேண்டும். அப்படி செய்தால் அது படம். அதுவே படம் !
” உனக்கு உடம்பு சரியில்லை என்று எனக்கு ஏன் சொல்லவில்லை ? ” என்ற கேள்விக்கு, ” நீ ஏன் கேட்கவில்லை ” என்ற பதில் … உள்ளே உறுத்துகிறது !. நம்மிடம் எல்லோரும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மை எல்லோரும் கவனிக்க வேண்டும் என நினைக்கிறோம். நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். அனைத்தும் நம்மை நோக்கி – என்று நிற்கும் நாம், பிறரின் பார்வையை புரிந்து கொள்கிறோமா ?
ஒரு பெண் முழுக்க சுதந்திர சிந்தனையுடன். அவளின் உலகத்தில் ‘so what ‘ என்ற கேள்வியின் அருகாமை எப்போதும். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற பார்வையில் அவளின் வாழ்க்கை பயணிக்கிறது. தன்னை நம்பும் அவள், தன்னை மட்டுமே நம்பும் அவள் … என்று இரு பிரதிபலிப்புகளில் அவள் வாழ்க்கை நம்மை யோசிக்க வைத்துகொண்டே இருக்கிறது. அப்படியே எதிர்மறையில் இன்னொரு பெண் – அவளுக்கு எல்லாமே குடும்பம், வீடு, உறவு … என்று தோன்றினாலும் அவளும் நம்பிக்கை பெண். இந்த இரு முரண்பாட்டு நம்பிக்கைகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் புரிதல்கள், adjustments … இதுவே படத்தின் முதுகெலும்பு.
அப்பாவை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ என்ற பார்வையில் உடையும் பெண் – உன் கூடத்தான் வாழப் போகிறேன் என்று முடிவெடுக்கும் பெண் … இரு பெண்களின் உலகம் வித்தியாச ஆச்சர்யம். உடை, நடை, வாழும் விதம், யோசிக்கும் விதம், பார்வை … அனைத்தும் இரு extreme உலகம். ஆனால் நடப்புகள் அவர்களை அருகே கொண்டு வருகிறது. ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். புரிதல் இன்னொரு நிலையை அடைந்தே ஆக வேண்டும். அப்படிதான் வாழ்க்கை தன்னை அவிழ்துக்கொள்கிறது. நம் வாழ்க்கையிலும் ‘எதிரும் புதிருமாக’ இருக்கும் பலரை நாம் கால ஓட்டத்தில் புரிந்து ‘அடடா’ என்று உணர்கிறோமே .. அங்கே இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம் !
படம் பார்த்தபின் யாரோ ஒருவரின் முகம் மனதிற்குள் வந்தால் … இந்த படம் நம்மை ஆட்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
கண்டிப்பாக யாரோ ஒருவரின் முகம் நினைவிற்கு வரும். அந்த முகம் உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவராக கூட இருக்க கூடும் !