Drive with next Gen :002
” ஞாபகம் இருக்கிறதா என்னை ? ”
எம் கேள்விக்கு சிரித்த முகமாய் பதில் வந்தது அந்த அம்மாவிடம் இருந்து.
” சொல்லுங்க சார் ”
” இங்க வேலை செய்துகொண்டே பெண் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களின் கணவர் இளநீர் விற்றுக்கொண்டு குடும்பத்தை முன்னேற்றுகிறார் ”
அவரின் முகம் மாறுகிறது.
” சார் சார் ..இப்போ ஞாபகம் வறது சார். மன்னிச்சுக்கங்க சார். நல்லா இருக்கீங்களா ? அவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா ? ( அவங்க எல்லாம் என்று அவர்கள் கேட்டது Ssubhachithra Sri Vishnu Vani Arumugam Anuthama Radhakrishnan அவர்கள் அனைவரையும் )
” நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க ? ”
” இருக்கோம் சார். ”
உழைப்பை முதலீடாக வைத்து பெண்ணை கல்லூரியில் படிக்க வைத்திருக்கும் குடும்பம் அது.
எம்முடன் வந்த ஆதித்யா – இதை ஆச்சர்யமாக கவனித்து கொண்டு இருந்தார்.
” சிரித்து பேச முடிகிறது உங்களால். எல்லாம் இருக்கும் மனிதர்களும் இப்படி சிரிக்க முடியாமல் திணறுகிறார்கள் ”
என்று நான் சொல்ல ..
” அவ்ளோதான் சார் வாழ்க்கை. என்ன கொண்டு போகப்போகிறோம் ?. பழசை நினைச்சு பிரயோஜனமில்லை. நடப்பது தான் நடக்கும் ன்னு போயிற வேண்டியதுதான் ”
ஆதித்யா விற்கு புதியதாக இருந்தது எல்லாம்.
பாடங்கள் புத்தகங்களில் இல்லை. மனிதர்களிடம் இருக்கிறது. மனிதர்களை படிக்க முடியாதவர்கள் ரசிக்கும் விஷயமே புத்தகங்கள். மனிதர்களையும் படித்து, புத்தகங்களையும் படித்தால் … இரு பக்க புரிதல் அது.
” புகைப்படம் எடுக்கிறோம் ”
சொன்னவுடன் வந்து நின்றார் அதே சிரிப்புடன் அந்த அம்மா.
கிளம்பும்போது சொன்னார் ..
” கஷ்டம் எல்லாம் நாம் பார்க்கிற பார்வையில்தான் சார் ”
Car இல் அமர்ந்தவுடன் ஆதித்யா சொன்னார் ..
” எவ்ளோ கஷ்டம். ஆனால் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. சிரிச்சிகிட்டே இருக்காங்க uncle ”
நான் பலமாக சிரித்து விட்டு கேட்டேன்.
” நாம ? ”
அமைதியாக இருந்தார் ஆதித்யா.
அங்கே ஆரம்பம் ஆகிறது அவரின் வாழ்க்கை.





