Slogging Songs : 004
#sloggingsongs 004
ரஹ்மான் ன் இந்த பாடல் கேட்ட முதல் முறையே என்னை வசப்படுத்தியது. என் தங்கை தான் முதலில் சொன்னாள். ” அண்ணா இந்த பாட்டு கேட்டியா… ? உனக்கு நிச்சயம் பிடிக்கும் “. நம் சார் மனிதர்களுக்கு நம் இரசனை பிடித்துப்போகிறது. அந்த ரசனை சார் பாடல்களை உடனே நமக்கு சொல்லிவிடுகிறார்கள். Link அனுப்புகிறார்கள். கேட்டு முடித்தவுடன் உடனே Call செய்து ” கேட்டியா ” என்று கேட்கிறார்கள். பின் மகிழ்கிறார்கள்.
“பச்சி உறங்கிருச்சு
பால் தயிரா உறைஞ்சிருச்சு
இச்சி மரத்து மேல
இலை கூட தூங்கிருச்சு ”
இதைவிட அழகாக இரவை சொல்ல முடியுமா ? பச்சி உறங்கும் நேரம் தான் இரவின் ஆரம்பம். பட்சிகள் ( பாட்டில் பச்சி 😊😊 ) வெளிச்சம் மங்கியவுடன் இரவென்று கொண்டாடுகின்றன. நாம் வெளிச்சம் மங்கியவுடன் செயற்கை வெளிச்சம் சேர்க்கிறோம். இயற்கையிடம் இருந்து மனிதன் விலகியது செயற்கை வெளிச்சம் ஏற்படுத்தியவுடன் மட்டுமே ! எந்த பறவையும் நம்மை போல வெளிச்சம் வைத்து இரவை கழிப்பதில்லை. முட்டாள்தனத்தின் உச்சம் அது. இன்னும் சரியாக சொன்னால் … 5 நட்சத்திர இரவு விடுதியில் . விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்து முகம் பார்ப்பதை பணம் கொடுத்து பெருமையாக பேசி நிற்கிறோம். வனத்தில் அது இலவச போர்வையாக விரிந்து கிடக்கிறது. பச்சி உறங்கும் நேரம்தான் இரவின் ஆரம்ப புள்ளி. அது விழிக்கும் நேரம் தான் பகலின் ஆரம்ப புள்ளி. உணர்பவர்கள் இயற்கையின் மனிதர்களாக மாறக்கூடும்.
” காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேலையில
ஆசை நோய் வந்த மக
அரை நிமிஷம் தூங்கலையே ”
காச நோயின் கொடுமையை கூட சிறிது நேரம் switch off செய்யும் ஒரே பொழுது இரவு மட்டுமே. ஆனால் ஆசை நோய் வந்தவள் அதே இரவில் தூங்க முடியாது தவிக்கிறாள். தவிக்கிறான். என்ன ஒரு முரண் ! ஆனால் என்ன ஒரு அழகான உதாரணம். Negative வலி மறக்க முடியும். Positive வலி – மறக்க முடியாது.
” ஒரு வாய் ஏறங்கலையே
உள் நாக்கு நனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலயே ”
காதல் வயப்படுதல் ஒன்னும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. உணவு இறங்க மறுக்கும். உள் நாக்கு ஒரே பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும். நினைவுகளில் முகம் பின்னிக்கொண்டே இருக்கும். எச்சில் நிலைத்து ஓர் உருவம் வாய் வழி நனையும். சமயங்களில் உதட்டு நுனியில் கசியும். முழுங்கி விட விரும்பாமல், வெளியேற்றவும் விரும்பாமல், நனைத்தலை அவ்வப்போது செய்துகொண்டு .. உள் நாக்குக்கும் உதடு நுனிக்கும் பயணிக்கும் அந்த Virtual Image Merging ( VIM ) அனுபவத்தை எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பது வானுக்கு முகவுரை எழுதுவது போல. முகவுரைக்கு பின்னே தான் சொல்ல முடியா ஸ்நேக உலகம் காத்திருக்கும். ஆக .. காதல் வயப்படுவது எளிதல்ல. எச்சில் முழுங்கா நாட்களில், உடல் ஈரமாகவே இருப்பது காதலில் மட்டுமே நிகழும் !
” ரப்பர் வளைவிக்கெலாம்
சத்தமிட வாயில்லையே ”
ரப்பர் வளைவிகள் சத்தம் இடுவதில்லை. உரசும். ஆனால் மௌனத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு சிரிக்கும். நமக்கு கேட்காது. கண்ணுக்கருகே உரசும் அவை ஏற்படுத்தா சத்தங்கள் காதலின் காதணிகள். ஆச்சர்யமாக காதணிகளும் ஒலி ஏற்படுத்துவதில்லை. காதுகளின் வளைவுகளில் பதுங்கும் காதணிகள் அங்கே பேசும் மௌனங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே கேட்கும். அதை அவர்கள் தனியாக இருக்கும்போது உதடுகளால் உறுதி செய்வதும் அழகாக நடக்கும்.
என்ன பாடல் என்று உங்களுக்கு தெரியக்கூடும்.
ஆம். #slogging 10000 steps செய்யும்போது இன்று எம்முடன் repeat mode இல் பயணித்த இந்த பாடல் ஏற்படுத்தும் Endorphin அதிர்வுகளில் .. மிதக்கும் எம் எழுத்துக்களை நீங்கள் இருக்கும் இடத்திலேயே விரல்களால் பிடித்து கொண்டு இன்றைய பொழுதை கடக்கலாம். உங்களின் நினைவுகளையும் அழைத்துக்கொண்டு.
நினைவுகளால் நிகழை கடப்பது தானே வாழ்க்கை ! 😊😊😊





