Slogging Songs 009
#SloggingSongs : 009
” அன்பே அன்பே
நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான்
இற்று போனேனே ”
சேரவில்லை எனில் ஆவி இற்று போகிறோம் எனில், சேர்கிறோம் எனில் ஆவியாகிப்போகிறோம் என்று தானே பொருள் ஆகும். சேர்வதால் ஆவியாகிப் போகுதல் ( ஆச்சர்யமாக ஆங்கிலத்தில் .. Smoking hot 😊😊 ) காதலின் மௌன கீதம்.
” வெய்யில் காலம் வந்தால் தான்
நீரும் தேனாகும்
பிரிவொன்று வந்தால்தான்
காதல் ருசியாகும் ”
எங்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லை – என்பது அப்பட்டமான பொய். காதலில் இந்த சண்டை, அதனால் பிரிவு, அது ஏற்படுத்தும் வலி, பின் மீண்டும் இணைதல் .. இதெல்லாம் சகஜம். Counselling வரும்போது எதிரும் புதிருமாக நின்ற பலர் இன்று சிரித்து வாழ்வதை கவனிக்கிறேன். அதுவே காதல். திடீரென்று காரணம் இன்றி அடித்துக்கொள்ளும். பின் .. அப்படியே இணையும். இணைந்தால் மீண்டும் சண்டை போடாது என்று அர்த்தம் அல்ல. பிரிவை சந்தித்தவர்களுக்கு காதலின் ருசி இன்னொரு உயரத்தில் தெரியும். சேர்வதும் சேராததும் அவரவர் விருப்பம். ஆனால் .. காதல் .. அவர்கள் உடன் பயணித்துகொண்டே இருக்கும்.
” கள்வா கள்வா
நீ காதல் செய்யாமல்
கண்ணும் எம் நெஞ்சும்
எம் பேச்சை கேட்காதே ”
கண்ணும் நெஞ்சும் பேச்சை கேட்க வேண்டுமெனில் காதல் செய் – என்பதில் இருக்கிறது சூட்சுமம். பல பிரிவுகளில் காதல் செய்தல் அற்றவுடன், ஆவி இற்றவுடன் …. கண்ணும் நெஞ்சும் வேறு பேச ஆரம்பிக்கின்றன. அங்கிருந்து இரு கோடுகள் ஆரம்பம்.
” ஆகாயம் நிறம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போகக்கூடாதே ”
மாற்றம் நிரந்தரம். அவனும் மாறுவான். அவளும் மாறுவாள். இதுவும் யதார்த்தம். ஆனாலும் மாற்றம் இல்லாமல் அவன் வேண்டும் அவள் வேண்டும் என்பது என்ன ? Simple. எண்ணங்களில் எப்போதும்போல கலந்திரு. உடல் மாற்றம் பற்றி கவலை இல்லை. எண்ணங்களில் எப்பொதும்போல .. கலந்திருந்தால் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு இருப்பதாகவே அர்த்தம்.
இந்தப் பாடலில் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். பாலைவனத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என்னும் அளவிற்க்கு அட்டகாசமான ஒளிப்பதிவு. ஒருவித பழுப்பு மற்றும் மஞ்சள் வர்ண காட்சி அமைப்பில் வெள்ளை கருப்பு உடைகளில் அசத்தும் இருவரும் வர்ணம் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆம். வெளிப்புற உலகில் அப்படித்தான் வாழ முடியும் !
பாடலை கண்டுபிடிப்போமா ?





