Slogging Songs 015
#SloggingSongs : 015
சில பாடல்கள் எம் மனதுக்குள் நெருக்கமாக, வலம் வருபவை. அவற்றில் இதுவும் ஒன்று. மனம் கவர்ந்தவள் முன் மாணவனாக நிற்பதில் இருக்கும் சுகமே வேறு.
“மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் “
நிறம் மாறும் மனசினை உடன் கைபிடித்து அணைப்பது மயக்கம் தான். நிறம் மாறும் அதே மனம் விழிப்புணர்வையும் கொடுப்பதால் தயக்கம் உடனே எழும். அந்த தயக்க அழகில் தொலைந்தவர்கள் மீள்வதில்லை. மீளவும் விரும்வதில்லை.
” நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் “
நெஞ்சுக்குழி யை காய வைக்கும் நினைப்பு ஒன்று உண்டா என்ன ? பொதுவாக நினைப்பு நெஞ்சுக்குழியை ஈரமாக்கும் என்பதே உலக உலக யதார்த்தம். ஆனால் இங்கே …? ஆம். சில நினைப்புகள் நெஞ்சுக்குழியை காய வைக்கும். சுரக்கும் எச்சில் அதை மீண்டும் ஈரமாக்கும். மாடு, பாதை எல்லாம் கடந்து … வண்டி சரியான இடத்தில் சேர்ந்து நிற்கும்.
” பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்பதுன்பம் யாரால “
சொல்ல வேண்டும் ஆனால் சொல்ல தெம்பு இல்லை. பொத்தி வைக்கவும் விரும்பவில்லை. இங்கே இருக்கும் இன்ப துன்பங்கள் இருவர் மட்டுமே சார்ந்தது. ஏன் நம்மால் நினைத்ததை சொல்ல முடிவதில்லை ? அதற்கு காரணம் சொல்ல வேண்டிய விதம் தெரியாததே ! எதையும் சொல்ல முடியும் – சொல்லும் விதம் சரியெனில் !
” பறக்கும் திசையேது
இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது “
பறக்கும் திசையை பறவை கண்டிப்பாக அறியும். இலக்கற்ற பறவை இந்த உலகில் இல்லை. உறவில் இருக்கும் மனதிற்கு செல்ல வேண்டிய இடம் கண்டிப்பாக தெரியும். தெரியாது புரியாது என்பதெல்லாம் கதை. தெரிந்தே தான் உறவை வளர்க்கிறோம். அணிகிறோம். அணைக்கிறோம்.
” பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு “
அன்பு கொண்ட நெஞ்சம் ஒரு நாள் உடலால் மறையும். ஆனால் நினைவில் ஆயுசு முழுக்க நிறையும். நூறு எல்லாம் குறைவு. ஆன்மா என்று ஒன்று இறந்த பின் திரியும் எனில் அங்கும் அன்பு கொண்ட நெஞ்சம் வாழ்ந்துகொண்டு தான் இருக்கும். துணையோடு !
” காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே “
” காத்திருத்தல் ” தான் உறவில் அழகு. அங்கே இருக்கும் மௌனத்தில் பூக்கும் பூக்கள் சத்தம் இன்றி அசைக்கின்றன. அசைகின்றன. உடனே சொல்வது மனித அழகு. காத்திருந்து சொல்வது இயற்கையின் அழகு. கொடுக்க நினைத்தாலும் மரம் ஒன்று தன் பழம் வரும்வரை காத்திருக்கிறது. வருடங்கள் ஆகலாம். ஆனாலும் பழத்தின் சுவை நிறைக்கும் வயிறு .. மனதை நிறைத்து நகர்கிறது.
காத்திருந்த கொடியில் பூக்கும் மல்லிகைக்கு வாசம் அதிகமானது மற்றுமில்லை. தனித்தன்மையானதும் கூட !
என்ன பாடல் என்று புரிகிறதா ?