மனங்களின் மறுபக்கம்: 012
#மனங்களின்மறுபக்கம் 012
சில மனிதர்களை கவனிக்கிறேன். தன்னிடம் தவறு இருப்பதை மறைக்க, அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் – மற்றவரை குறை சொல்லுதல். இதில் அக்கறை என்கிற போர்வை வேறு !
இங்கே இரு வியாதிகள் முளைக்கின்றன.
1. தன் தவறை திசை திருப்பி மறைக்க முயல்வது.
2. தன் தவறை தொடர்ந்து செய்வது.
சில மாதங்களுக்கு முன்பு இதே தவறை செய்த நட்பு ஒன்றுக்கு bye சொன்னேன். அது இன்னும் திருந்தவே இல்லை என்பது நேற்று புரியவந்தது. ஆக .. திருந்தப் போவதில்லை. அது அந்த நட்பின் பிரச்சினை. ஊர் என்றாவது திருத்தும். தன்னால் திருத்திக்கொள்ள முடியாதவர்களை ஊர் தானே திருத்தும் !?
ஆக .. நாம் கற்பதை கவனிப்போம்.
தன் தவறை திசை திருப்பி மறைக்க முயல்வது – ஏன் இப்படி ஒரு முயற்சி ?
பொதுவாக மனிதன் ” தான் சரி ” என்கிற image மிக முக்கியம் என்று நினைத்துவிடுவான். அதற்காக தான் சரி என்று சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிப்பான். அதில் ஒன்றுதான் திசை திருப்ப முயற்சிப்பது. மறைக்க முயல்வது. அவனின் ” தான் சரி ” image ஐ அப்படி அவன் கெட்டியாக பிடிக்க காரணம் என்ன ? அப்படி வாழ்வது ஒரு போதை. பெரும் போதை. அங்கே தான் தான் தவறு என்று தெரியவருவதை அவன் விரும்புவதில்லை. அதற்காக அவன் செய்யும் முதல் முயற்சி – எதிரில் இருப்பவர்களை தவறு என்று சொல்வது. ஆக எல்லோரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்ப, அவன் ” ஹப்ப்பாடா தன்னை யாரும் கவனிக்கவில்லை ” என்று தனக்குள் பேசிக்கொள்வான்.
இந்த மன வியாதி அவனை இரண்டாம் கட்டத்திற்கு அழைக்கும். ஆம்.
செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும்.
இதில் பெண்களை குற்றவாளியாக்கிவிட்டு, தப்பிக்க நினைப்பது இன்னும் ஒரு மோசமான மனநிலையின் வெளிப்பாடு.
பொதுவாக ” நம்மை உலகம் கவனிக்கிறது ” என்ற மனநிலை வைத்திருப்பவன் தன்னை சரியாக்கி கொள்வான். அதேபோல .. ” உலகம் என்னை பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை ” என்பவனும் தன்னை சரி செய்து கொள்வான். இவர்கள் இருவரும் இந்த உலக இயக்கத்தை பற்றி எல்லாம் கவலைப்படாதவர்கள்.
ஆனால் .. இந்த இரண்டிலும் இல்லாமல் …தன் தவறை மறைக்க பிறரை குறை சொல்பவன் .. தானும் திருந்தாமல், உலகத்திற்கும் முகமூடியை கொடுத்து விடைபெறுவான்.
ஆக .. கேள்வி இதுதான்.
இந்த வியாதி உங்களிடம் இருக்கிறதா ?
குடும்பத்தில், தனி ஒழுக்கத்தில், அலுவலகத்தில், பொது வெளியில் .. உங்களிடம் தவறு இருப்பதை மறைக்க ஊரெல்லாம் பழி சொல்லும் முயற்சியில் இருக்கிறீர்களா நீங்கள் ? அப்படி எனில் இந்த வியாதியில் நீங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் வெளிவருவது சிரமமே.
ஆகையால் உங்களிடம் இருந்து மற்றவர்கள் பிரிவதும் யதார்த்தமாகவே நடந்துவிடும்.
யோசிப்போம். பயணிப்போம் ஒரு Community யாக.