Training Diaries ; 006
” என் கணவருக்கு ஏன் என் முயற்சிகள் / வெற்றிகள் / எரிச்சல் தருகின்றன ?. என்னால் இதற்கு மேல் முடியவில்லை. பிரியலாம் என்று யோசிக்கிறேன். ”
அவரை கவனித்தேன். நடுத்தர வயது.
” உங்கள் முயற்சிகள் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுக்கிறதா ? கொடுக்குமா ? ”
அவர் தீர்க்கமாக சொன்னார்.
” வாய்ப்பே இல்லை ”
” உங்கள் முயற்சிகளால் கணவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுமா ? ”
” 100 சதவிகிதம் வாய்ப்பில்லை ”
” குழந்தைகளின் படிப்புக்கு உங்களின் முயற்சிகள் / வெற்றிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா ? ”
” என் presence இல்லை என்பது வேண்டுமானால் .. சொல்லலாம். மற்றபடி நன்றாகவே வளர்த்திருக்கிறேன். அப்படி எதுவும் இல்லை. ”
” இப்படியெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. ( Personal ஆக இந்த கேள்விகளில் எனக்கு உடன்பாடு இல்லை ! ) ஆனால் குடும்ப பொறுப்பில் நீங்கள் இருப்பதால் கேட்டேன். இவ்வளவும் கடந்து தான் அவர் எரிச்சல் அடைகிறாரா ? ”
” ஆம். ”
முகத்தில் ஒரு கோபம் அவர்களுக்கு. எனக்கு புரிந்தது. ” இவ்வளவையும் கடந்துதான் நான் சாதிக்க வேண்டுமா ? ” என்கிற கோபம் அது !
” பொதுவாக ஆணுக்கு பணம், பதவி, சமூக அந்தஸ்து, பெயர் .. ஆகியவை.. அவனை கடந்து செல்வது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அதாவது இவை அனைத்தும் அவன் control இல் இருக்கவேண்டும். அதுவும் மனைவி அப்படி செய்தால் .. ? அவனை கடந்து சென்றால் ? அவனால் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இந்த நிகழ்வு ”
அவர் அமைதியாக கவனித்தார்.
” தன்னால் முடிந்தவரை தடுப்பதும், முடியவில்லை எனில் emotional தடுப்புகளை நிறுவுவதும், அப்படியும் முடியவில்லை எனில் … பெயரை கெடுக்க முயற்சிப்பதுமாக .. கடைசியில் Divorce என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதுமாக அவன் இருப்பான் ”
” Exactly. அதே நிலைமை தான் என்னுடையது. பெயரை எல்லாம் கெடுத்தாகிவிட்டது. Divorce நோக்கி தான் நகர்கிறேன். குழப்பமாக இருக்கிறது. அப்பா இல்லை. தனியாக வாழ்வதை நினைத்தால் … ” என்று கண்ணில் நீர் வழிய சொன்னார்.
நான் மெதுவாக கேட்டேன் ..
” உங்களுக்கு தீர்வு சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்ல முடியும் ”
” சொல்லுங்கள் ”
” தன்னால் தனியாக நிற்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பதால் தான் பெண்களுக்கு இந்த முட்டுக்கட்டை நிகழ்வுகள் கண்ணில் படுகின்றன. மேற்சொன்னவைகள் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கின்றன. அப்படி அவர்களால் நிற்க முடியாது என்று நம்புவதால் தான் ஆண் இந்த தடுப்புகளை செய்து கொண்டே இருக்கிறான். ஆக … துணிந்து உங்களின் Passion நோக்கி பயணிப்பதே வழி. ஒரு ஆணால் தனியாக வாழ முடியாது. ” அவன் ஆண் பிள்ளை. அவனுக்கென்ன ? ” என்ற கேள்வி பொய்யான ஒன்று. அவன் ஒரு Dependant. ஆக .. நீங்கள் உங்களின் பயணத்தினை ஆரம்பித்தால் அவன் ” நீங்கள் இல்லாத ” உலகம் உணர்வான். அங்கே மன மாற்றங்களுக்கும் வாய்ப்புண்டு. மனம் மாறி வந்தால் consider செய்யலாம் ”
” மனம் மாறவில்லை எனில் ? ”
” பிரிவில் மாறா மனம், கசந்திருக்கும் உறவில் மாறப்போவதில்லை. வாழ்த்துக்கள். ”
இன்று 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் சிறப்பாக தொழிலில் முன்னேறி இருக்கிறார். குழந்தைகளை அடுத்த நிலை நோக்கி நகர்த்தி இருக்கிறார். பிரிதல் நடந்த தடங்கள் எல்லாம் இப்போது இல்லவே இல்லை. சமீபத்தில் கணவர் மீண்டும் வந்து இணைவதை பற்றி பேசியபோது ” வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள்.” என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். ( அது அவரின் முடிவு ! )
கடந்த முறை என்னை சந்தித்த போது ..
” Thanks Jai. கொஞ்சம் குழப்பமான மனநிலை அது. சரியான நேரத்தில் என் Passion ஐ எனக்கே காண்பித்தீர்கள் ” என்று சிரித்தார்.
அமைதியாக நின்றேன்.
அவரின் மகன் அவரை அழைத்து செல்ல வந்திருந்தான்.
” போகலாம் ” என்று அவர் மகனிடம் சொன்னபோது … மகன் சொன்னார்
” நீயே Drive செய். உன் Drive அளவிற்க்கு எனக்கு வராது ”
தாய் Drive செய்ய .. அமரும் teen மகனை பார்த்தபோது .. எல்லாம் சரியாகவே செல்கிறது என்று எனக்கு தோன்றியது. எல்லாம் சரியாகவே செல்லும் – திறமை மேல் நம்பிக்கை இருந்தால் – கணவன் மனைவி இருவருக்கும் !