Jerspectives : 005
#100Photographs ; 003
💐💐💐💐
மழை போல ஒரு ஊரினை அழகாக்கும் மந்திரம் எதுவும் இல்லை. சாலைகளை கழுவி, கட்டிட வீடுகளை கழுவி, வனங்களை கழுவி … ஆக ஒரு ஊரையே பளிச் என்று செய்துவிட்டு வந்த தடம் இல்லாமல் மறைகிறது. சில மனிதர்கள் மழை மாதிரி. நம்மை சுத்தம் செய்துவிட்டு மறைந்துபோவார்கள். முழுவதுமாக !
இரவும் மழையும் இதமானவை. இரண்டும் சேர்ந்து வந்தால் ? …ஒத்தட இதம் என்று சொல்லலாம். யாருமற்ற அருகில், இயற்கை என்னுடன் பேச எடுக்கும் முயற்சி தான் இரவின் மழை ! முனகலில் ஆரம்பிக்கும் பேச்சு, இயற்கையின் பேச்சுவார்த்தையை நான் கேட்கவில்லை எனில் இடி மின்னல் என்றும், கேட்டால் சாரலாகவும் முடிகிறது.
செயற்கை வெளிச்சங்கள் நீர்த் தரையில் பட்டு தெரிப்பதை போல .. ஒரு ஓவியம் உலகில் உண்டா என்று தெரியவில்லை. நன்கு கழுவப்பட்ட நேர்த்தியான சாலைகளில் வெளிச்சங்கள் ஆடும் நீர் நடனம் … மனதை இழுக்கவல்லது. முழுவதுமாக.
சென்னையில் Chozha Sheraton இல் ஒரு நிகழ்வை முடித்துவிட்டு திரும்ப வரும்போது எடுத்த புகைப்படம் இது. அந்த பயணத்தை முடிக்கவே மனம் இன்றி .. சாலையில் கொஞ்ச நேரம் தொடர்ந்துகொண்டே இருந்தேன். பின்னே ? மழை என் உயிரின் ஆரம்ப புள்ளி அல்லவா ? விட்டு விட்டு வர அது தொப்புள் கொடி அல்ல. மூச்சுக்காற்று !
