நான் எனப்படும் நான் : 43
#WhoisJay : 018
இந்தியா முழுக்க சுற்றி இருக்கிறேன். கடின நேரங்களில் ” யாரோ மனிதர்கள் ” வந்து உதவி இருக்கிறார்கள். அந்த உதவிகளுக்கு அவர்கள் யாரும் எந்த பணமும் கேட்டதில்லை. இன்னும் சரியாக சொல்ல போனால் ” வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்லுங்கள் ” என்று அன்பாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் யாரும் என்னை ” நீ இந்துவா முஸ்லிமா கிருஸ்த்துவனா ” என்று கேட்டது இல்லை. அங்கே இருக்கிறது உண்மையான இந்தியா !
எவ்வளவோ முக்கிய பிரச்சினைகள் இருக்கும் இந்த நாட்டில் இப்போது ( அதுவும் குறிப்பாக சமீப காலமாக ) நீ என்ன மதம் என்பது தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அல்லது அப்படி ஒரு கோர முகம் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆட்சியில் இருக்கும்போது தான் கட்சிகளின் உண்மையான முகம் வெளியே வருகிறது. எதிர்க்கட்சிகள் நமக்காக பேசுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆளும் கட்சிகள் ஆட்சியை தக்கவைக்க / எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் ஒரு இலக்கிற்காக – என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகின்ற தேசம் இது ! வன்முறை வேண்டாம் என்று வாய் கிழிய சொல்லும் கட்சி குஜராத்தில் செய்யாத வன்முறையா ? வன்முறைக்கு எதிராக போராடும் இன்னொரு கட்சி அவர்களின் ஆட்சி காலத்தில் செய்யாத வன்முறையா ? என்ன ஓர் அழகான நாடகம் இது !
ஒரு பயணியாக வேறெங்கும் இராத ” வேற்றுமையில் ஒற்றுமை ” இந்த தேசத்தின் மண்ணில் மட்டும் தான் பார்க்க முடியும். மொழியே தெரியாத போதும் எனக்கு விபத்தில் உதவிய மனிதர்கள் சொல்லிய மதத்தின் பெயர் ” மனிதம் “. அந்த மதத்திற்கு வண்ணம் பூச நினைக்கும் யாரும் இங்கே ” நிரந்தரமாக ” இருக்க வாய்ப்பில்லை ! இந்த தேசத்தை ஒரு வண்ணத்திற்கு மாற்ற நினைப்பவர்கள் தான் மாறுவார்களே தவிர தேசம் மாறாது.
என் மதம் ” மனிதம் “. இதை மாற்ற முயல்பவர்களை பார்த்து சிரித்து கடப்பதே எம் இயல்பு. அப்படியும்… வன்முறையாக எம் ” மனிதம் ” மதத்தை மாற்ற முயற்சித்தால், மனிதமும் ரௌத்திரம் பழகும். மனிதத்தின் ரௌத்திரம் நிறுத்த முடிவதல்ல ! எதையும் அது எதிர்கொள்ளும். ” மனிதம் ” சொல்லும் மனிதர்களின் ரௌத்திரம் எளிதாக கடந்து செல்ல முடிவதல்ல.
” யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்பதை… சொல்வது யார், அவர் என்ன Principles இல் வாழ்கிறார் …. என்பதை பொறுத்து அதன் அர்த்தம் மாறக்கூடும். உலகத்தை ” யாதும் ஊரே ” என்பவன் தன் இனம் மொழி மதம் என்று எல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டான். அவனுக்கு ஒரே சிந்தனை தான் இருக்க முடியும். அது ” மனிதம் ” மட்டுமே. என்னை பொறுத்தவரை நான் சாலையில் சந்தித்த, எவ்வித பிரதிபலனும் எதிர்பாரா ” யாரோ மனிதர்கள் ” தான் ” யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்று சொல்ல தகுதியானவர்கள். அப்படி ஒருவராய் நீங்கள் இருப்பின் நான் உங்களை நிச்சயம் சந்திப்பேன் ! ஆம். நாம் சந்திப்போம் – மனிதத்தின் மூலம். மதங்களின் மூலம் அல்ல !