நான் எனப்படும் நான் : 049
#WhoisJay ; 024
💐💐💐
இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. 08 / 09 /10 ஆம் வகுப்பு படித்த காலத்தில் … விடுமுறை நாட்கள் வந்தால் போதும் – கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை என்று பயணித்து கொப்பனாபட்டி வந்து அடையும்போது, தாத்தா பேருந்து நிலையத்தில் காத்திருப்பார். ” முத்துக்குமார் ” என்று அவர் என்னை அனைத்து சிரிப்பது இன்னும் ஞாபகத்தில். உடனே என்னை அவர் அழைத்து செல்வது அருகில் இருக்கும் தேநீர் விடுதிக்கு தான்.
” பேரன் வந்திருக்கான். Biscuit கொடு. Coffee ஒண்ணு கொடு ”
என்று கடைக்காரரிடம் பேசிவிட்டு மீண்டும் என்னை பார்த்து சிரிப்பார். அவ்வளவு பிரியம் அவருக்கு. சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு போனால் … அப்பத்தா வாசற்படியில் காத்திருப்பார். ” எம் பிள்ள எம் பிள்ள ” என்று தான் என்னை இறுக கட்டி கொள்வார். மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது மட்டும் தான் நான் என் அப்பத்தாவின் பேரன். அவருக்கு நான் எப்போதும் ” எம் பிள்ள ” தான் !
மறுநாளே நான் மாடுகளை மேய்க்க கிளம்பி விடுவேன்.
” நான் போய்ட்டு வர்றேன் அப்பத்தா ” என்றால் கேட்க மாட்டார். ” நானும் வர்றேன்பா. இங்க என்ன செய்யப்போறேன் ? “. இருவருமாக போவோம். அப்பத்தாவும் பேரனுமாக … பேசிக்கொண்டே செல்வதை ஊர் பார்க்கும். வெயிலுக்கும், மழைக்கும் .. எனக்கு தன் சேலையை அணிவிப்பார். அப்படி என்னை பார்த்துக்கொண்ட நாட்கள் அவை.
அந்த நாட்களில் ஒரு சிறிய வீடு தான். முன்னே வீடு, பின்னே தொழுவம். 5 மாடுகள். அப்படி வாழ்ந்த வாழ்க்கை பின்னாளில் வளர்ச்சி வந்தபோது கட்டப்பட்ட வீடு தான் இது. எதுவெல்லாம் எங்களுக்கு அந்த வீட்டில் இல்லையோ, அதை எல்லாம் மனதில் வைத்து அப்பா கட்டியது தான் இந்த வீடு.
இந்த வீடு தாத்தா அப்பத்தா – இருவரின் கிரஹ பிரவேச வரவும், வயது காரணமான இறப்பும் இந்த வீட்டில் தான் நடந்தது. தாத்தாவுடன் பேசிய நாட்கள் மறக்க முடியாதவை.
” நாம உதவி பண்ணியதா தான் இருக்கணும். மற்றவர்கள் நம்மை மகிழ்வாய் நினைக்கணும் ”
அவ்வளவு தான் அவரின் Logic.
” செய்யாதவங்களுக்கு செஞ்சு காட்டு.” இது அப்பத்தாவின் Logic.
அந்த வரிகள் இன்று வரை உள்ளே உழல்கின்றன.
இங்கே முத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. எங்களின் பழைய வீடு அந்த கோவிலுக்கு எதிரே தான் இருந்தது. அங்கே தான் நான் பிறந்தேன். எனக்கு முத்துமாரியம்மன் ஆலய நினைவாக ( வேண்டி பிறந்த குழந்தை என்று ) தாத்தா வைத்த பெயர் ” முத்துக்குமார் “. அப்பா வைத்த பெயர் ” ஜெயசேகரன் “.
இறக்கும் வரை தாத்தா என்னை ” முத்துக்குமார் ” என்று தான் கூப்பிட்டார். அப்பத்தாவிற்கு இறக்கும் வரை நான் ” பிள்ள ” தான் !
இப்போதிருக்கும் வீடு, Car எல்லாம் என் மனதின் ‘உடன்’ பயணிப்பவை. அப்போதைய பழைய வீடு என் மனதின் ” உள் ” பயணிப்பது. அந்த மாடுகளின் கத்தும் சத்தம் இன்னும் என் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இருக்கும் – மூச்சு உள்ளவரை !