நகரும் புல்வெளி : 047
#justgetout ; 004
💐💐💐
மண்ணை கவனித்தது உண்டா நீங்கள் ? இந்த மொத்த உலகின் இயக்கமும் அதன் மேல் தான் நடக்கிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் மொத்த கழிவும் மண் மேல் தான் கொட்டப்படுகிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் அனைத்து தீவிரவாதமும், அன்பும், வன்முறையும், சமாதானமும் …மண்ணின் மேல் தான் நடக்கின்றன. அது அப்படியே இருக்கிறது. ஒரு நாளும் அது விதை விதைத்தால் வேறு ஒன்றை தருவது இல்லை. அந்த விதைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை செவ்வனே கொடுக்கிறது.
மனதை கவனித்தது உண்டா நீங்கள் ? இந்த மொத்த உலகின் இயக்கமும் அதன் மேல் தான் நடக்கிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் மொத்த கழிவும் மண் மேல் தான் கொட்டப்படுகிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் அனைத்து தீவிரவாதமும், அன்பும், வன்முறையும், சமாதானமும் …மண்ணின் மேல் தான் நடக்கின்றன. அது அப்படியே இருக்கிறது. ஒரு நாளும் அது விதை விதைத்தால் வேறு ஒன்றை தருவது இல்லை. அந்த விதைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை செவ்வனே கொடுக்கிறது.
என்ன ?. ஒரே மாதிரி இருக்கிறதா ? ஆம். மண்ணும் மனமும் ஒன்று தான். இங்கு தான் இருக்கிறது என்று சொல்ல முடியா அளவிற்கு … இரண்டும் பரந்து விரிந்திருக்கிறது. அதே போல .. இரண்டின் மேலும் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அளவே இல்லை. ஆனாலும் இரண்டும் அமைதியாகவே இருக்கின்றன. திடீரென்று ஒருநாள் ரௌத்ரம் ஆடிவிட்டு மீண்டும் ஒன்றுமே நடக்காதது போல .. தன்னை வைத்துக்கொள்கின்றன.
ஆனாலும் மண் மனதை விட ஓரிடத்தில் முன்னேறுகிறது. தனக்குள் விழுந்தவற்றை அது சிறப்பானதாகவே தருகிறது. எப்போதும் கெடுதல் நினைப்பது இல்லை. ஆனால் மனம் ? ஆம். உள்ளே விழுந்த காட்சி, ஒலி, உணர்வுகள், உடல்மொழிகளுடன் … நஞ்சு கலந்து … வேறு வார்த்தைகளாக செய்கைகளாக .. வெளியே வரும்போது .. அது மண்ணிடம் தோற்று போகிறது. மண் அப்போதும் அப்படியே இருக்கிறது.
மண்ணின் ” எப்படி கொடுத்தாலும் என்னை சிறப்பாக திருப்பி கொடுப்பேன் ” குணம் மனதில் வர வேண்டும். அதுவே மண்ணிற்கு செய்யும் பெரும் உதவி. அந்த மனம் கிடைத்து விட்டால் மண்ணும் பாதிப்புகளில் இருந்து வெளியேறும்.
” எப்படி கொடுத்தாலும் சிறப்பாக திருப்பி கொடுப்பேன் “மனம் இருக்கிறதா நம்மிடம் ?
💐💐💐





