Jerspective : 029
அந்த உலகில் … அவை அவை அவற்றிற்கான இடத்தில் அழகாய் வாழும். எல்லைகள் இல்லை. மதம் அங்கே இல்லை. போர் இல்லை. ஜாதிப் பெருமை இல்லவே இல்லை ! நீர் இருக்கிறது. நிலம் இருக்கிறது. காற்று இருக்கிறது. வான் இருக்கிறது. நெருப்பு மட்டும் இல்லை. ஏன் எனில் தேவை இல்லை. தேவை என்றால் மட்டுமே … இயற்கை தேவையானவற்றை வைத்திருக்கும்.
இங்கே இருக்கும் மொத்த உலகத்திலும் .. நான் மட்டுமே அந்நியன். ஆனால் .. இந்த நீர் நிலம் காற்று வான் என்னை ஒன்றும் கேட்கவில்லை. இருக்கும் மிருகங்கள் தலையை உயர்த்தி .. என்னை பார்த்து விட்டு மீண்டும் தலையை தொங்க போட்டு தன் வேலையை தொடர்ந்தன. ஆக .. நான் உண்மையிலேயே அந்நியன் தான் அங்கே !
இங்கே வீசும் காற்று பேசும். என்ன காற்று பேசுமா ? ஆம். காற்று .. பெரும் வெற்றிட வெளியில் .. எப்போதுமே பேசும். ஊ ஊ ஊ என்று அவை பேசுவதை கேட்க மனிதன் இங்கே மௌனமாக இருக்க வேண்டும். மனிதன் மௌனமாக இல்லை எனில் .. காற்று பேசினால் அவனுக்கு கேட்காது. நீர் பேசுவது கேட்காது. நெருப்பு பேசினால் கேட்காது. நிலம் பேசினால் கேட்காது. வான் பேசினால் கேட்காது. மனிதன் மௌனமாக இல்லை என்பதால் தான் நகரங்கள் நரகங்கள் ஆகின்றன !
இந்த மலைகளின் மௌனம் தான் என் பெரும் ஆச்சர்யம். இந்த உலகின் பெரும் பலம் நிறைந்த .. இயற்கையின் Representation .. மலை ஒன்று தான். ஆனால் மலை மௌனமாகவே இருக்கிறது – காலத்திற்கும் !
எதிரே நகரும் வாகனங்கள் …மனிதர்கள் …சத்தம் போட்டு கொண்டு இருப்பதை ..அந்த மலை .. கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் .. அமைதியாகவே இருக்கிறது. உலகின் பெரும் பலசாலி பேச மாட்டான். அவனுக்கு தெரியும். எதிரே சும்மா சத்தம் போடுபவர்கள் இன்னமும் பலம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் – என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மனதில் உடலில் ஆன்மாவில் .. பலம் நிறைந்தவர்கள் பேசுவதில்லை. மற்றவர்கள் ? சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அது சரி. சத்தம் போடும் .. மௌனமாக வாழும் மனிதர்களில் … நீங்கள் யார் ?





