Jerspective : 032
” Life is the Result of Consistent Continuous Actions “



Leh வின் அதிகாலை பொழுதில் அந்தப் பெண்மணியை நான் சந்தித்தேன். ஒரு மூடிய கடையின் முன்புறம். அதில் இருந்த சிறு இடத்தில் தான் காய்கறிக் கடையை அவர் நிறுவிக் கொண்டு ( ! ) இருந்தார். ஆம். அது ஒரு தினசரி நிறுவல். Fixed கடை அல்ல அது. தினசரி Construct செய்து .. தினசரி Dismantle செய்ய வேண்டும்.
முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவரிடம் .. கேரட் வேண்டும் என்று சொன்னபோது …
” சில நிமிடம். இதை சரியாக வைத்துவிடுகிறேன். பின் தருகிறேன் ” என்று என் கண்களை பார்த்து பேசிவிட்டு மீண்டும் கடையை நிறுவும் முயற்சியை தொடரந்தார். நிதானமாய். அழகாய். பக்குவமாய். காய்கறிகளுக்கு வலிக்காமல். ஒவ்வொன்றாக அடுக்கிவிட்டு மீண்டும் ஒரு முறை சரியாக இருக்கின்றதா என்று கவனித்து .. ? வாடிக்கையாளர் வந்துவிட்டால் பரபரத்து போகும் உலகில் இப்படி ஒரு நிதானமா ?
” எதையும் சரியாக செய்ய வேண்டும். இல்லை என்றால் எனக்கு நிறைவாக இருக்காது ” என்று சிரித்தவண்ணம் ஒரு பதில் அவரிடம் இருந்து – ஆம் – நான் கேட்காத கேள்விக்கு. காத்திருக்கும் வாடிக்கையாளருக்கு அழகான Reasoning.
அவருக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் மற்றும் வெள்ளை மூட்டைகளில் இருந்து தான் இவற்றை எடுத்து வைக்கிறார். அந்த மூட்டைகளை அவர்தான் தூக்கி வந்திருக்கிறார். எவ்வளவு தூரம் தூக்கி வந்தீர்கள் ? என்று கேட்டால் 03 கிலோமீட்டர் என்று சிரிக்கிறார். ஆம். 03 கிலோமீட்டர் தன் காய்கறிகளை தானே தூக்கி வந்து, அவற்றினை சரியாக அடுக்கி, விற்று, மீதம் உள்ளவற்றை மீண்டும் எடுத்துக்கொண்டு … வீடு சென்று …என்ன ஒரு Persistent வாழ்க்கை !
” எவ்வளவு நாளாக இந்தக் கடை ? “
” இது இங்கே .. இப்போதான் ஒரு வருஷமா. இதுக்கு முன்னே வேறொரு இடத்தில் 10 வருஷமா. அந்த road ஐ பெரிசு படுத்தினாங்க. நான் இந்த Road க்கு வந்திட்டேன் “
அரசாங்கம் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் குடிமக்கள் பார்வையில் இருந்து செய்யவேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் !
” அங்க வாங்கிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போது இங்கே வருகிறார்களா ? “
” இல்லை. அது கொஞ்சம் தூரம். அது அவ்வளவு தான். போனது தான். வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் இங்கே புது வாடிக்கையாளர்களை பெற முயற்சிக்கிறேன். வர ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்கள் “
10 வருட உழைப்பு ! மீண்டும் ஒரு வருட உழைப்பு. இந்த சாலையும் ஒரு நாள் விரிவாக்கப்படும் !
கடையை அழகாக நிறுவிவிட்டு என்னிடம் கேட்டார் .. “கேரட் எவ்வளவுக்கு ? “
ஆம். அவரின் வாழ்க்கையின் இன்னொரு நாள் துவங்குகிறது. பெரும் நம்பிக்கையுடன். நானே அவரின் முதல் வாடிக்கையாளன்.
சாலையோர கடைகளில் இருப்பவர்களை கொஞ்சம் கவனிப்போம். அங்கே ஒரு வாழ்க்கை … தன்னை நிலைப்படுத்திக்கொள்ள தினமும் முயற்சித்துகொண்டே இருக்கிறது – நாம் பார்த்துவிடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் !


