Jerspective : 044
” If there are people in other planets, for them ….Earth May be a Heaven. Who Knows ? “
ஏதோ ஒரு கோளில் இருந்து … ஒரு குழு இங்கே வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களிடம் நம்மால் பேச முடிகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.
” இங்கே இமயமலை இருக்கிறதாமே .. எங்கள் கடவுளின் பிறப்பிடம் இங்கே தான். இது தான் எங்கள் வழக்கப்படி சொர்க்கம். நாங்கள் இங்கே வந்ததற்கு மகிழ்கிறோம். பிறவிப் பலனை அடைந்து விட்டோம் ” என்று குதித்துக்கொண்டே சொன்னால் .. என்ன தோன்றும் நமக்கு ?
” இங்கே தஞ்சாவூர் பெரிய கோவில் என்று ஒன்று இருக்கிறதாமே .. அதை பார்த்து விட்டால் என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை ” என்று அந்த குழுவில் ஒருவர் சொன்னால் என்ன தோன்றும் நமக்கு ?
” இங்கே ஒரு வருடம் தங்கி … திருக்குறளை முழுமையாக படிக்க போகிறேன். அந்த குறளை படித்துவிட்டால் அனைத்து கோள்களுக்கும் வகுப்புகள் எடுக்க முடியுமாம் ” என்று ஒருவர் சொன்னால் .. ?
” இந்தியா என்ற இந்த பகுதியில் நான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு 600 கிலோமீட்டர்க்கும் இங்கே அனைத்தும் மாறிவிடுமாமே … அதை ரசிக்கவே வந்திருக்கிறேன் ” என்று ஒருவர் சொன்னால் …
ஆம். நம் பூமி போல ஒரு சொர்க்கம் இருக்க வாய்ப்பில்லை. வேறு எந்த கோளையும் பார்க்காமல் உன்னால் எப்படி சொல்ல முடிகிறது ? என்றா கேட்க முடிகிறது. இதோ என் பதில்.
” இருக்கும் இடத்தை ரசித்தால் அதுவே சொர்க்கம். பழித்தால் அதுவே நரகம். இருக்கும் இடத்தை பழித்து விட்டு எத்தனை கடவுளர்களை கும்பிட்டாலும் சொர்க்கம் கிடைக்க போவது இல்லை. இருக்கும் இடத்தை ரசித்தால்…உலகத்தின் எந்த சொர்க்கமும் தேவை இல்லை “
அந்த நிலாவில் இருந்து ஒருவன் ஒருத்தி அநேகமாக பூமி நோக்கி இப்போது பயணித்து கொண்டு இருக்க கூடும். அவர்களுக்கும் இது பொருந்தும். நிலாவில் இருப்பவர்களுக்கு நிலாவே சொர்க்கம். பூமி அல்ல ! பயணிப்பது வேறு. எதையோ நோக்கி பயணிப்பது வேறு.
என்ன ? உங்கள் வீட்டை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்களா ?





