Jerspective : 047
” நனைதலின் செயல் அகக் கழுவல் “.



அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இயல்பாக திரும்ப முடியாத அறை. ஒரு சிறு pipe. அதில் சிறு துளைகளுடன் வட்ட வடிவ Steel பொருத்தம். அந்த துளை வழியே வரும் நீர் உடலில் பட்டு நனைந்து …. என்ன ஏது ? என்று உணர்வதற்குள் Soap Shampoo என்று செயற்கை அறை .. வரும் நீரின் உப்புத்தன்மை, நாற்றம் .. கால் கை உடல் என்று அங்குலம் அங்குலமாக தொட்டு ….போதும் போ .. என்று … Towel கையில் வந்து விடும் ! இதற்கு பெயர் குளியல் என்று வைத்திருக்கிறோம் … 



நட்ட நடுக் காட்டுக்குள் … பச்சை பசேல் என்று யாருமற்ற ஒரு பெரும் மலை. எங்கோ பெய்யும் மழையின் ஓட்டம் தரை இல்லையே என்று நிற்காமல் … வேகத்தை அதிகப்படுத்தி கீழே விழும்போது … உருவாகும் அருவிக்கு கீழே நின்றால் … Soap இல்லை, Shampoo இல்லை, உப்பு நீர் இல்லை, நாற்றம் இல்லை, அங்குலம் அங்குலமாக நாமே முயற்சி செய்து கழுவுதல் … என்று எதுவும் இல்லை. Just நிற்க வேண்டியது தான் !
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் எல்லாம் இருக்கட்டும். நடுக்காட்டில் யாருமற்ற அருவியை இங்கே யார் எல்லாம் பார்த்திருக்கிறீர்கள் ? அதாவது நீங்களும் அருவியும் மட்டும் ! ( புகைப்படம் எடுக்க வாய்ப்பில்லை ஆனால் Tripod இருந்தால் எடுக்க முடியும் ! ). கோபுர தரிசனத்தை விட எனக்கு அருவியின் மேலே இருந்து கீழே விழும் தரிசனம் தான் கோடி புண்ணியம் அல்ல – கோடி நல் எண்ணங்களாக படுகிறது. அருவிக்கு கீழே நின்று ஒருவனை கெட்ட எண்ணங்களை நினைக்க சொல்லுங்கள் பார்ப்போம் ! முடியவே முடியாது !! இயற்கையின் / அருவியின் அறை அப்படி 





தலையில் விழுந்து சிலிர்க்கவைத்து விட்டு, தோள், மார்பு என்று ஒரு அருவி நம்மை ” அதன் வழிகளில் ” ஒன்றாக மாற்றும்போது உடம்பு உதறுமே .. அது என்ன புரிகிறதா ? குளிர் இல்லை அது. இயற்கையோடு இணைதல் ! அதுவும் நடு மார்பில் விழுந்து கால்களை நோக்கிய பயணத்தை அருவி எடுக்கும்போது கூனிக் குறுகி நிற்கிறோமே .. அங்கே அழிகிறது ஆணவம் ! அங்கே ஆரம்பமாகிறது அகக் கழுவல் !
இயற்கையின் பெறுங்கைகள் தான் அருவிகள். மொத்த இயற்கையையும் பூமியில் உள்ள அனைத்து அருவிகளையும் கைகளாய் நினைத்து பாருங்கள். உங்களுக்கு நான் சொல்வது புரியும். அவ்வப்போது உடலை அணைத்துக்கொள்ளும் நிகழ்வு தான் மேகம் அருவியாக .. அருவி ஆறாக மாறும் நிகழ்வு. அப்போது அருவிக்கு கீழே நாம் நின்றால் ? நம்மையும் அரவணைத்து கடப்பது நமக்கு புரியும் ! அங்கே தான் அகக் கழுவலில் அத்துணை தேவை அற்றவைகளும் அழியும். புறக்கழுவலும் அகக் கழுவலும் நடைபெறும் ஒரே இடம் அருவி. மற்ற இடங்களில் எல்லாம் வெறும் புறக்கழுவல் மட்டுமே !
யாரும் அற்ற அந்த அருவியில் குளிக்கும் போது .. அங்குலம் அங்குலமாக அழியும் ” நான் ” ஐ பார்க்க மகிழ்வாக இருந்தது. புதுப்பித்த உடலுடன் வெளியே வந்து நிற்கும்போது .. நான் மிக சாதாரணன் என்று ஆகி இருப்பதை உணர முடிந்தது.
உங்களால் இப்போது நான் சொல்வதை உணர முடிகிறதா ?


