Jerspective : 048
” A Good Shepherd Has Deep Observations “



வேறெதுவும் அந்த மேய்ப்பருக்கு தெரியவில்லை. ஆடுகள், அவை மேயும் விதம், செல்லவேண்டிய பாதை, செல்லக்கூடாத பாதை, வெயில், மழை, புல் இருக்கும் பகுதி .. தன் வாழ்க்கை !
அந்த பெரும் மரம் என்னவோ சொல்வது போல இருந்தது எனக்கு. அசையாது அது கவனிக்கும் அசைவுகளுக்கும், அசைந்து அந்த மேய்ப்பர் கவனிக்கும் அசைவுகளுக்கும் .. பெரிய வித்தியாசமில்லை. மரம் விடும் மூச்சை மேய்ப்பர் சுவாசிக்கிறார். மனிதன் மற்றும் அனைத்தும் விடும் மூச்சை மரம் சுவாசிக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இந்த இருவரின் பணி – அமைதியாக காத்திருந்து கவனிப்பதே !
ஒரே ஒரு ஆடு .. புல்லுக்கு பதில் முள் செடியை கடிக்கிறது. வாயை எடுக்க முடியாமல் தடுமாறுகிறது. அதிகபட்சம் சில நொடிகள் தான் – மேய்ப்பர் அங்கே நிற்கிறார். அந்த முள் செடியின் கரங்களை வெளியேற்றுகிறார். ஆடு சுதந்திரமாக நிமிர்ந்து பார்க்கிறது. அதன் தலையை மேய்ப்பர் வேறு பக்கம் திருப்புகிறார். ஆடு புல் உண்ண ஆரம்பிக்கிறது. மேய்ப்பர் சிரிக்கிறார். ஆம். தன் ஆடு தடுமாறும்போதெல்லாம் வந்து உதவும் ஒவ்வொரு மேய்ப்பரும் இயேசு கிறிஸ்துவே ! நாம் தடுமாறும்போது உடன் உதவிக்கு வரும் ஒவ்வொருவரும் நம்மின் மேய்ப்பர்களே !
எனக்கு மிக நெருக்கமான புகைப்படம் இது ! ஏன் ? என்னவோ தெரியவில்லை .. அந்தப் பெரு மரம் என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தது. அந்தப் பெரு மரத்தின் அமைதியும் .. நடக்கின்ற அனைத்தையும் பார்த்துக்கொண்டு நிற்பதையும் பார்க்கும்போது …ஒரு வரி பளிச் என மின்னி மறைகிறது.
” ஒரு Witness ஆக நின்று வாழ்ந்து மறைந்து போ “
என்ற அந்த குரல் .. கொஞ்சம் ஆழமானது. அந்த மேய்ப்பர் வாழ்க்கையும் அப்படித்தான் அநேகமாக இருக்கக்கூடும். எம் வாழ்க்கையும். நம் வாழ்க்கையும் !
தலையில் தொப்பி, ஏதோ ஒரு உடை, கையில் நீருக்காக ஒரு Plastic Bottle, மழை வந்தால் தலையை மறைக்க மஞ்சள் தடுப்பு ஒன்று … அந்த ஆடுகளின் மேல் முழு கவனம், உதவுதல், அமைதியாய் இருத்தல், நடப்பதை ரசித்தல் … அவ்வளவே வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு பெரும் அர்த்தம் இருக்கிறது. நம் வாழ்க்கைக்கும் இருக்கிறதா ? என்று அந்த மரம் கேட்பது எனக்கு கேட்கிறது.
உங்களுக்கு ?


